உதயங்க வீரதுங்க நாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு

உதயங்க வீரதுங்க நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அவரின் சட்டத்தரணி நீதிமன்றில் அறிவிப்பு

by Staff Writer 29-06-2018 | 4:21 PM
Colombo (News 1st)  ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க நாட்டிற்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உதயங்க வீரதுங்க துபாயில் கைது செய்யப்பட்டு அத்மாத் பிராந்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு, இலங்கையிலிருந்து அதிகாரிகள் துபாய்க்கு செல்ல வேண்டும் என சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மிக் ரக விமான கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலங்கை விமானப் படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஐவரின் வணிக வங்கிகளிலுள்ள 40 வங்கிக் கணக்குகளை சோதனைக்குட்படுத்துவதற்கு நீதிமன்றம் இன்று நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய வங்கியினால் உதயங்க வீரதுங்கவிற்கு சொந்தமான வங்கிக் கணக்கொன்று தடை செய்யப்பட்டு 7 நாட்களுக்குள் நாட்டிலுள்ள அவரின் வணிக வங்கியொன்றின் கணக்கிலிருந்து 3 கோடியே 57 இலட்சம் ரூபா பணம் , ஐக்கிய அரபு இராச்சியத்தின் வங்கிக் கணக்கொன்றிற்கு அனுப்பப்பட்டுள்ளமை மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், எவ்வாறு பணம் அனுப்பப்பட்டுள்ளது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.