ரெஜினாவின் சீருடை, பாதணியை பொலிஸார் எடுத்துச்சென்றதாக தந்தை தெரிவிப்பு; பொலிஸார் மறுப்பு

ரெஜினாவின் சீருடை, பாதணியை பொலிஸார் எடுத்துச்சென்றதாக தந்தை தெரிவிப்பு; பொலிஸார் மறுப்பு

ரெஜினாவின் சீருடை, பாதணியை பொலிஸார் எடுத்துச்சென்றதாக தந்தை தெரிவிப்பு; பொலிஸார் மறுப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2018 | 9:43 pm

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் சிறுமியின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் சிறுமியின் சீருடை ஒன்றையும் பழைய பாதணி ஒன்றையும் எடுத்துச்சென்றதாக சிறுமியின் தந்தை தெரிவித்தார்.

எனினும், அவ்வாறு எதனையும் எடுத்துச்செல்லவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சுழிபுரம் பகுதியில் 6 வயதான சிவனேசன் ரெஜினா பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுழிபுரம் சந்தியில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

பொதுமக்களும் பிரதேச பாடசாலை மாணவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

சில அரசியல்வாதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அங்கு சென்ற போது அமைதியின்மை ஏற்பட்டது.

அனைத்து சம்பவங்களும் முடிவடைந்த பின்னர் ஏன் தற்போது இங்கு வந்தீர்கள் என மக்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர்.

நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றமையினால் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு செல்ல முடியவில்லையென இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மக்கள் பின்னர் சுழிபுரம் சந்தியில் காரைநகர் – யாழ்ப்பாணம் பிரதான வீதியை மறித்து மறியல் போராட்டம் நடத்தினர்.

இதேவேளை, சிறுமி ரெஜினாவிற்கு நீதி கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமான பேரணி சேர் பொன். இராமநாதன் வீதியினூடாக சென்று யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியை மறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவனேசன் ரெஜினா என்ற தரம் ஒன்றில் கல்வி பயின்ற சிறுமி கடந்த திங்கட்கிழமை (25) பாடசாலை முடிவடைந்து வீட்டிற்குத் திரும்பிய போது சந்தேகநபர் சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு, கழுத்தை நெரித்து படுகொலை செய்த பின்னர் பாழடைந்த கிணறொன்றில் சடலத்தை வீசியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சிவகுமார் சதீஸ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மல்லாகம் நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை நேற்று (27) ஆஜர்ப்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் கழுத்தை நெரித்து தானே கொலை செய்ததாக சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

சிறுமியின் சீருடை காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட போதிலும் பாதணியைக் கண்டுபிடிக்க முடியவில்லையென வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மூன்று குழுக்கள் விசாரணை செய்வதாகவும் சிறுமியின் வீட்டுக்கு சென்று வேறு சீருடையையும் பாதணியையும் பொலிஸார் பெற்றதாகக்கூறும் விடயம் தமக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்திடம் வினவியபோது, விசாரணைகளுக்காக பொலிஸார் சிறுமியின் வீட்டுக்கு சென்று சீருடை மற்றும் பாதணியை பெற்றுக்கொள்ளவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

எனினும், இந்த விடயம் தொடர்பில் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தரவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

இது குறித்து ஆராய்வதற்காக பொலிஸ் அதிகாரியொருவரை அப்பகுதிக்கு அனுப்புவதாக அவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்