ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: வழக்கு இழுத்தடிப்பு

கல்குடாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: வழக்கை இழுத்தடிக்கும் பொலிஸார்?

by Bella Dalima 28-06-2018 | 9:13 PM
Colombo (News 1st)  மட்டக்களப்பு - கல்குடா பகுதியில் செய்தி சேகரிப்பிற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் ஏ.சி.ரிஸ்வி முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் இருவரும் மன்றில் ஆஜராகியிருந்தனர். எனினும், வழக்கு தொடர்பில் கல்குடா பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு இன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை பிழையானது என நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே மூன்று தடவைகள் குறித்த அறிக்கைகள் பிழையாக சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து இன்று இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. எனினும், இன்றும் அந்த அறிக்கை பிழையாக காணப்பட்டமையால் அதனை திருத்தி சமர்ப்பிப்பதற்கு பொலிஸாரால் கால அவகாசம் கோரப்பட்டது. இருப்பினும், பொலிஸாரின் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார். வழக்கை இழுத்தடிக்கும் வகையில் பொலிஸார் செயற்படுகின்றனரா என சந்தேகம் எழுவதாக நீதவான் இதன்போது கூறியுள்ளார். இந்த வழக்கில் சமாதானத்திற்கு வர விருப்பமா என முறைப்பாட்டாளரிடம் நீதவான் வினவியபோது, அதற்கு முறைப்பாட்டாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கக்கூடிய விதம் குறித்து பொலிஸாருக்கு நீதவான் அறிவுருத்தியதுடன், எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அன்றைய தினம் விளக்கமளிப்பு நடைபெறும் என நீதவான் அறிவித்துள்ளார். எனினும், தமது கட்சிக்காரர்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் ஔிப்பதிவு செய்யப்படுவதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றுக்கு அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தமது கட்சிக்காரர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். எனினும், வௌிப்புறத்திலிருந்து ஔிப்பதிவு செய்வதில் எவ்வித சிக்கலும் இல்லை என நீதவான் கூறியுள்ளார்.