ட்ரம்ப் - புட்டின் சந்திப்பு

ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு மொஸ்கோ, வொஷிங்டன் இணக்கம்

by Chandrasekaram Chandravadani 28-06-2018 | 10:46 AM
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான உச்சிமாநாட்டை நடத்துவதற்கு வொஷிங்டனும் மொஸ்கோவும் இணங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனுக்கும் இடையில் நடைபெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. அடுத்த மாதம் பிரசல்ஸில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டின் பின்னர் புட்டினுடனான சந்திப்பு நடைபெறலாம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நடைபெறுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புட்டினுடனான சந்திப்பின்போது, சிரிய போர், ரஷ்ய ஜனாதிபதியுடனான உக்ரைனின் நிலவரம் போன்றன குறித்து கலந்துரையாடப்படும் என செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான கூட்டம் தொடர்பான முடிவு கடந்த புதன்கிழமை கிரெம்ளின் வௌிவிவகாரக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவினால் அறிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பு நடைபெறும் திகதி, இடம் போன்றன இன்று (28) உத்தியோகபூர்வமாக  அறிவிக்கப்படும் எனவும் மற்றும் யூரி உஷாகோ தெரிவித்துள்ளார். அதேநேரம், இரு நாட்டுத் தலைவர்களும் தமது நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்திக் கொள்வதற்கு இந்த உச்சிமாநாட்டைப் பயன்படுத்த விரும்பியுள்ளதாகவும் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார்.