by Staff Writer 28-06-2018 | 2:01 PM
Colombo (News 1st) தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது ஏற்படுகின்ற செலவீனங்களைக் குறைத்துக்கொள்வது தொடர்பில் சட்டமூலம் ஒன்றை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டவாக்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடாக இதற்கான ஆரம்பக்கட்ட சட்டவரைபுகள் வழங்கப்பட்டுள்ளதாக சட்டவரைஞர் தீபானி குமாரஜீவ குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகள் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தல் செயற்பாடுகளுக்கான செலவீனங்களை வரையறுப்பதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டமூலத்திற்கு அமைய தேர்தல்கள் செயற்பாடுகளுக்கான அனைத்து செலவீனங்களையும் வேட்பாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வேட்புமனு ஏற்றுக்கொண்டதன் பின்னர் அரசியல்கட்சி அல்லது வேட்பாளரின் பெயரில் 2 வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும தேர்தலுக்கான அனைத்து வரவுசெலவுகளும் இந்தக் கணக்குகள் ஊடாகமேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.