சீனாவின் பொறிக்குள் இலங்கை: நியூயார்க் டைம்ஸ் கட்டுரை தொடர்பில் அஜித் நிவார்ட் கப்ரால் கருத்து

சீனாவின் பொறிக்குள் இலங்கை: நியூயார்க் டைம்ஸ் கட்டுரை தொடர்பில் அஜித் நிவார்ட் கப்ரால் கருத்து

சீனாவின் பொறிக்குள் இலங்கை: நியூயார்க் டைம்ஸ் கட்டுரை தொடர்பில் அஜித் நிவார்ட் கப்ரால் கருத்து

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2018 | 8:20 pm

Colombo (News 1st)  நியூயார்க் டைம்ஸ்-இன் புலனாய்வுக் கட்டுரை தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கருத்து வௌியிட்டுள்ளார்.

சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை சிக்கியுள்ளமை தொடர்பில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அண்மையில் புலனாய்வுக் கட்டுரையொன்றை பிரசுரித்திருந்தது.

அதிக வட்டிக்கு கடன் வழங்கி அரச தொழில் முயற்சிகளை சீனா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் விதத்தை, ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தை உதாரணப்படுத்தி செய்தி வௌியிடப்பட்டிருந்தது.

துறைமுக திட்டத்தை நடைமுறைப்படுத்திய சீன நிறுவனம், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஸவின் பிரசார நடவடிக்கைகளுக்காக 7.6 மில்லியன் டொலரை வழங்கியதாக நியூயார்க் டைம்ஸ் அம்பலப்படுத்தியது.

இந்நிலையில், இந்த கட்டுரையை பிரசுரித்த ஊடகவியலாளர் , ஏற்கனவே ஒரு விடயத்தை தீர்மானித்து விட்டு அதனை எழுதியுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுமார் ஒரு மணித்தியாலம் குறித்த ஊடகவியலாளருக்கு விடயங்களை தௌிவுபடுத்தினாலும் அதற்கு நியாயமான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த செய்தியில் உள்ள விடயங்களுக்கு அஜித் நிவாட் கப்ரால் பதில் அளிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அவரால் மாத்திரமே பதில் அளிக்க முடியும் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் புலனாய்வுக் கட்டுரையை எழுதிய ஊடகவியலாளர் மாரியா அபி ஹபிப் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஸவை தொடர்புகொள்வதற்கு பல்வேறு வழிமுறைகளில் முயற்சித்தாலும் அது பலனளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இரண்டு மாதங்களாக 10 கேள்விகளை அனுப்பி பதில்களுக்காக காத்திருந்ததாகும் மாரியா அபி ஹபிப் கூறினார்.

பல சந்தர்ப்பங்களில் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸவை சந்திப்பதற்கு முயற்சித்தாலும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

”ஒரே மண்டலம் – ஒரே பாதை” எனும் பெயரில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களுடன் இணைந்து செயற்படும் போது விழிப்புடன் இருக்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த எச்சரிக்கையை விடுத்ததுடன், இறுதியாக கடந்த 20 ஆம் திகதி கடன் வசதியை விஸ்தரிக்கும் நான்காவது தேர்ச்சி மீளாய்வு அறிக்கையிலும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

சீனாவின் ”ஒரே மண்டலம் – ஒரே பாதை” திட்டத்தில் அனுகூலங்கள் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை தமது பாரிய திட்டங்களை கவனமாக முகாமைத்துவத்திற்கு உட்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக திட்டங்கள் மூலம் இலங்கைக்கு வளர்ச்சியை பெற்றுக்கொடுக்க முடிந்தாலும் நாட்டின் அதிகக் கடன் சுமை மற்றும் சமூக அபிவிருத்தி தேவைகளை கவனத்திற்கொண்டு இந்த திட்டங்களை கவனமாகக் கையாள வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி சீனாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டின் லகார்ட் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ திட்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்தார்.

ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் நாடுகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி வசதியை வழங்க முடியும். எனினும், இந்த திட்டத்தினால் சிக்கல் நிலை ஏற்படலாம். பாரிய கடன் தொகையை உருவாக்கி அதன் ஊடாக நாட்டின் ஏனைய செலவுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. துண்டு விழும் தொகையின் சவால்கள் காரணமாக மீளச்செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகரிக்கின்றது. ஏற்கனவே அரச கடன் அதிகம் உள்ள நாடுகள் நிதிச்சட்டங்களை மிகவும் கவனமாக முகாமைத்துவப்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகும்.

2016 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் இலங்கை 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவிற்கு வழங்க வேண்டி இருந்ததாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த தொகை நிகர தேசிய உற்பத்தியில் 5.8 வீதம் என நாணய நிதியத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே பெருமளவு கடனை இலங்கைக்கு வழங்கியுள்ளதுடன், இறுதியாக வழங்கிய 1.5 பில்லியன் டொலர் கடன் தொகையை கட்டங்கட்டமாக விடுவிப்பதற்கு பல்வேறு காரணங்களை முன்வைத்திருந்தது.

புதிய அந்நியச் செலாவணி சட்டம், உள்நாட்டு இறைவரிச் சட்டம் உள்ளிட்ட சட்ட திருத்தங்கள், எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான விலை சூத்திரம் ஆகியன சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்காக மேற்கொள்ளப்பட்டதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியில் பல குறைபாடுகள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ட்விட்டரில் நேற்று (27) பதிவிட்டிருந்தார்.

உலக பொருளாதாரத்தில் துரித அபிவிருத்தியைக் கண்டுள்ள சீனா மீது மேற்கத்தைய நாடுகள் கொண்டுள்ள அச்சமே இந்த அறிக்கை பிரசுரிக்கப்படுவதற்கான காரணம் என நாமல் ராஜபக்ஸவின் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்