இரண்டாம் சுற்றை உறுதி செய்தது ஆர்ஜென்டினா

உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: கடும் போராட்டத்தின் பின்னர் இரண்டாம் சுற்றை உறுதி செய்தது ஆர்ஜென்டினா

by Staff Writer 27-06-2018 | 9:02 PM
உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆர்ஜென்டினா கடும் போராட்டத்தின் பின்னர் இரண்டாம் சுற்றை உறுதி செய்தது. நைஜீரியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆர்ஜென்டினாவிற்கு இந்த வாய்ப்புக் கிட்டியது. D குழுவில் இடம்பெற்றுள்ள ஆர்ஜென்டினா தனது கடைசி லீக் போட்டியில் நைஜீரியாவை எதிர்கொண்டது. ஆர்ஜென்டினா சார்பாக லியோனல் மெஸி 14 ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டார். இதன்படி முதல் பாதியில் 1-0 என ஆர்ஜென்டினா முன்னிலை வகித்தது. கோல் போட பல முயற்சிகளை எடுத்த நைஜீரியாவுக்கு 51 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் போது விக்டர் மோசஸ் கோலடித்தார். போட்டி சமநிலை அடைந்த நிலையில், நைஜீரிய வீரர்கள் கோல் எல்லையை பல தடவைகள் ஆக்கிரமித்தனர். எனினும், 86 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீன அணியின் ரோஜோ கோல் போட நைஜீரியா தோல்வியைத் தழுவியது. போட்டியில் 2-1 எனும் கோல் கணக்கில் ஆர்ஜென்டினா வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தது. போட்டியின் முதல் பாதி முடிவடைந்த நிலையில், மரடோனாவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு மைதானத்தில் அவர் இயலாமையை எதிர்கொண்டிருந்தார். எனினும், தமக்கு எவ்வித பாதிப்புமில்லை என 57 வயதான மரடோனா சமூக வலைத்தளத்தில் பின்னர் பதிவிட்டார். கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட உபாதையால் பீட்டர்ஸ்பேர்க் போட்டியில் முதல் பாதியை மாத்திரம் பார்வையிடுமாறு மரடோனாவுக்கு வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார். எனினும், ஆர்வமிகு இந்தப் போட்டியை பார்வையிடாமல் தான் எவ்வாறு மைதானத்தில் இருந்து வெளியேற முடியும் என மரடோனா கேள்வி எழுப்பியிருந்தார்.