3 ஆவது டெஸ்ட்: 4 விக்கெட்களால் இலங்கை வெற்றி

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்: 4 விக்கெட்கள் வெற்றியுடன் தொடரை சமப்படுத்திய இலங்கை

by Staff Writer 27-06-2018 | 8:46 PM
  Colombo (News 1st) மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 4 விக்கெட்களால் வெற்றிகொண்ட இலங்கை தொடரை சமநிலையில் முடித்தது. மூன்றாம் நாளில் களத்தடுப்பின் போது காயத்திற்குள்ளான குசல் ஜனித் பெரேரா பிளாஸ்டர்களுடன் களமிறங்கி இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். பார்படோஸ் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 204 ஓட்டங்களையும், இலங்கை அணி 154 ஓட்டங்களையும் பெற்றன. மேற்கிந்தியத்தீவுகள் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 93 ஓட்டங்களுடன் முடிவுக்கு வர, இலங்கை அணியின் வெற்றி இலக்கு 144 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய இலங்கை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களுடன் நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 25 ஓட்டங்களுடன் ஆட்டத்தை ஆரம்பித்த குசல் மென்டிஸினால் இன்று மேலதிகமாக ஓர் ஓட்டத்தைக் கூட பெற முடியவில்லை. எனினும், உடலில் கட்டுக்களுடன் களமிறங்கிய குசல் ஜனித் பெரேரா 6 ஆம் விக்கெட்டிற்காக டில்ருவன் பெரேராவுடன் இணைந்து இலங்கை அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார். டில்ருவன் பெரேரா 28 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு வெற்றியை அடைந்தது. இதன் மூலம் பார்படோஸ் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் வெற்றிபெற்ற முதல் ஆசிய அணியாக இலங்கை வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்கு அமைவாக, தொடர் 1-1 எனும் ஆட்டக்கணக்கில் சமநிலையில் முடிவுற்றது. நட்சத்திர வீரர்களான அணித்தலைவர் டினேஷ் சந்திமால், அஞ்சலோ மெத்யூஸ், ரங்கன ஹேரத் ஆகியோர் இல்லாமல் இலங்கை அணி இந்த வெற்றியை ஈட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.