சிறுமி கொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

சுழிபுரம் சிறுமி கொலை: குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

by Staff Writer 27-06-2018 | 8:24 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மல்லாகம் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சிவகுமார் சதீஸ்குமார் என்பவரே கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 6 வயதான சிவனேசன் ரெஜினா என்ற சிறுமியின் கழுத்தை நெரித்து தானே கொலை செய்ததாக சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. தரம் ஒன்றில் கல்வி பயின்ற சிவனேசன் ரெஜினா எனும் சிறுமி நேற்று முன்தினம் (25) பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த போது சந்தேகநபர் சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்த பின்னர் பாழடைந்த கிணறொன்றில் சடலத்தை வீசியுள்ளார். பிரேதப்பரிசோதனையின் பின்னர் சடலம் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நேற்றைய தினமே பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன. போதைப்பொருள் பாவனையே இந்த கொலைக்கு முக்கிய காரணம் எனவும் சந்தேகநபர் கஞ்சா போதைப்பொருக்கு அடிமையாகியிருந்ததாகவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார். இதேவேளை, வடக்கில் இடம்பெற்ற மிகக்கொடூரமான மற்றுமொரு துஷ்பிரயோக சம்பவமாக சிவனேசன் ரெஜினாவின் கொலை பதிவாகியுள்ளது. புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ள பின்புலத்திலேயே இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது. போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடபகுதியில் அதிகளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. மாதகல், வடமராட்சி கிழக்கு, மன்னார், தலைமன்னார் உள்ளிட்ட கடற்பரப்புகளிலேயே அதிகளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடவில்லை என இலங்கை - இந்திய மீனவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தனர். மூன்று தசாப்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பேரழிவை ஏற்படுத்தி வரும் போதைப்பொருள் பயன்பாட்டினை ஒழிப்பதற்கு இதுவரை முடியாதுள்ளமைக்கு காரணம் என்ன?