மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றியீட்டிய இலங்கை அணி

மே.இந்தியத்தீவுகளுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் வெற்றியீட்டிய இலங்கை

by Staff Writer 27-06-2018 | 7:49 AM
Colombo (News 1st) மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இது பார்படோஸின் பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் ஆசிய அணியொன்று அடையும் முதலாவது டெஸ்ட் வெற்றியாகப் பதிவானது. பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. 50 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆம் இன்னிங்ஸைத் தொடர்ந்த மேற்கிந்தியத்தீவுகள் தடுமாற்றமான ஆரம்பத்தைப் பெற்றதோடு 93 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. 144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலளித்தாடிய இலங்கை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களுடன் இன்றைய 4ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. குசல் மென்டிஸ் 25 ஓட்டங்களோடும் டில்ருவன் பெரேரா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தில் குசல் மென்டிஸ் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணியின் வெற்றி சற்று கேள்விக்குறியானது. இருந்தபோதிலும், சகலதுறை வீரரான டில்ருவன் பெரேரா மற்றும் குசல் ஜனித் பெரேரா ஜோடி 63 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியின் வெற்றியைப் பிரகாசப்படுத்தியது. குசல் ஜனித் பெரேரா 2 பவுன்ட்ரிகளுடன் 28 ஓட்டங்களைப் பொறுமையாக பெற, டில்ருவன் பெரேரா 3 பவுன்ட்ரிகளுடன் 23 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி 40.2 ஓவர்களில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதற்கமைய, இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1 - 1 என சமநிலையடைந்தது. எவ்வாறாயினும், பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கை அணி அடையும் தொடர்ச்சியான 2ஆவது வெற்றியாகவும் இது பதிவாகியமை சிறப்பம்சமாகும். போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஹேசன் ஹோல்டர் தெரிவானார். தொடர் முழுவதும் பிரகாசித்த ஷேன் டவ்ரிச் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதை வென்றார்.