கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு $273M 

நஜீப் ரசாக் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 273 மில்லியன் டொலர்கள்  

by Bella Dalima 27-06-2018 | 4:51 PM
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 273 மில்லியன் டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. பண மோசடி வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அலுவலகம் என 6 இடங்களில் பொலிஸார் கடந்த மாதம் சோதனை நடத்தினர். சோதனையின் போது சுமார் 284 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த நவீன கைப்பைகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர். அந்த பைகள் பலவற்றில் நகைகளும், பல இலட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. கைப்பற்றபட்ட பணம், நகைகளின் மதிப்பை தற்போது வெளியிட முடியாது எனவும், மீதமுள்ள பைகளையும் சோதனை செய்து அவற்றின் மதிப்பையும் கண்டறிய வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை 150 பொலிஸார் இணைந்து கணக்கிட்டு வந்த நிலையில், அதன் மொத்த மதிப்பை தற்போது அவர்கள் வௌியிட்டுள்ளனர். இதன்படி, நஜீப் ரசாக்கின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு 273 மில்லியன் டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 12,000 நகைகள், 567 ஆடம்பர கைப்பைகள், 234 சன் கிளாசஸ் மற்றும் 423 விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்றவை அடங்கும். இது மலேசிய வரலாற்றில் இதுவரை கிடைக்காத மிகப்பெரிய புதையலாகக் கருதப்படுகிறது. இது தொடர்பில் முன்னாள் பிரதமர் நஜீப் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நஜீப் ரசாக்கும் அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.