ட்ரம்பின் பயணத்தடைக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல்

ட்ரம்பின் பயணத்தடைக்கு அமெரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல்

by Staff Writer 27-06-2018 | 5:52 AM
இஸ்லாமிய நாடுகள் சிலவற்றின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்த பயணத்தடைக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். நாட்டின் ஏனைய நீதிமன்றங்கள் இந்தப் பயணத்தடை தீர்மானம், குறித்த சட்டத்துக்கு உட்பட்டதல்லவென தெரிவித்து அனுமதியளிக்க மறுப்புத் தெரிவித்திருந்தன. இந்நிலையில், அமெரிக்க உயர்நீதிமன்றம் 5 - 4 எனும் அடிப்படையில் இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கமைய ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகின்றது. இருப்புனும், குறித்த பயணத்தடை அகதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களினால் வெகுவாக விமர்சிக்கப்பட்டுள்ளதோடு, இந்தத் தடை உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே , 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் பதவியேற்றவுடன் அமுலுக்குக் கொண்டுவர எண்ணிய முதலாவது கொள்கை இதுவென டரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.