ஈரான் விவகாரம்: இந்தியாவிற்கு அமெரிக்கா மிரட்டல்

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடை: இந்தியாவிற்கு அமெரிக்கா மிரட்டல்

by Bella Dalima 27-06-2018 | 5:13 PM
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தாவிட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்பும் நாடுகளில் ஈராக், சவுதி அரேபியாவைத் தொடர்ந்து 3 ஆவது இடத்தில் ஈரான் உள்ளது. அண்மையில் ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தது. உடனடியாக உலகளவில் ஈரானை தனிமைப்படுத்தும் வேலைகளை அமெரிக்கா செய்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் வாங்குவதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக, ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி முன்பை விடக் குறைந்து கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் மறைமுக விளைவாக கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தாவிட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கெடு விதித்துள்ளனர். அவ்வாறு ஒத்துழைப்பு வழங்காத நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, வர்த்தக ரீதியாக அந்நாடுகளை முடக்குவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.