பல்கலை மாணவர்கள் கொலை:சந்தேகநபர்கள் சாட்சிகளாகினர்

யாழில் பல்கலை மாணவர்கள் இருவர் கொலை: 3 சந்தேகநபர்கள் அரச தரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்

by Bella Dalima 26-06-2018 | 3:42 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் அரச தரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர். ஏனைய இரண்டு சந்தேகநபர்களுக்கும் குற்றவியல் சட்டத்தின் கீழ், சுருக்க முறையற்ற விசாரணை முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் - குளப்பிட்டி சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 பொலிஸார் கைது செய்யப்பட்டதுடன், ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். குறித்த ஐவரும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் கடந்த செப்டம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் சுருக்க முறையற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில், வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இரண்டாவது , நான்காவது மற்றும் ஐந்தாவது சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம், குறித்த மூவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மன்றில் இன்று அறிக்கையிட்டனர். இதனையடுத்து, வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எதிர்வரும் தவணைகளில் சுருக்க முறையற்ற விசாரணை யாழ். நீதிவான் நீதிமன்றில் முடிவுறுத்தப்பட்டு, ஆவணங்கள் மேல் நீதிமன்ற நடவடிக்கைக்காக சட்ட மா அதிபரிடம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.