மாத்தறை சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பம்

மாத்தறை கம்புறுபிட்டி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பம்

by Staff Writer 26-06-2018 | 8:32 AM
Colombo (News 1st) மாத்தறை கம்புறுபிட்டியவில் நேற்றிரவு நடைபெற்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையுடனான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகிய நிலையில், சம்பவத்தில் தப்பிச்சென்ற சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ​பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பாதாளக் குழுவுக்கிடையேயான துப்பாக்கிச்சூட்டின்போது, சந்தேகநபர்கள் சிலர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். நேற்றிரவு இவர்களைத் தேடும் பணிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரினால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. மாத்தறை கம்புறுபிட்டிய, அகுரஸ்ஸ வீதியில் வில்பிட்ட பகுதியில் நேற்றிரவு 7.45 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் குழுவொன்றுக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தெற்கின் பாதாளக் குழுவின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார். ஆயுதம் தாங்கிய குழு ஒன்று கம்புறுபிட்டிய பிரதேச்தில் நடமாடுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர். வீதித்தடை மூலம் முச்சக்கரவண்டியொன்றை சோதனைசெய்ய முயன்றவேளையில் முச்சக்கரவண்டி நிறுத்தாமல் தொடர்ந்து சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து விசேட அதிரடிப்படையின் ஜீப் ஒன்று சென்றுள்ளது. முச்சக்கரவண்டியை வில்பிட வனப்பகுதிக்குத் திருப்பி அங்கிருந்த விசேட அதிரடிப்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது விசேட அதிரடிப்படை மேற்கொண்ட பதில் தாக்குதலில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வீழ்ந்திருந்த நிலையில் காணப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் தேடுதலில் டீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் இதன்போதுகண்டெடுக்கப் பட்டுள்ளது. சந்தேநபரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் மாகந்துரே மதுஷ் எனும் குற்றவாளியின் தென் மாகாண பிரதான உதவியாளர் ஒருவரான சுது அகுருகே மானெல் ரோஹன எனும் திலக் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.