மஹிந்தவின் தேர்தல் பிரசாரத்திற்கு உ தவிய  சீனா

மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரசாரத்திற்கு 7 மில்லியன் டொலர்களை வழங்கிய சீனா

by Staff Writer 26-06-2018 | 8:28 PM
Colombo (News 1st)  ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்திற்கு செலுத்த வேண்டிய 976 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இறுதித் தவணையை அண்மையில் சீன நிறுவனம் வழங்கிய போதிலும், இலங்கையின் வளங்கள் சீனாவின் வலைக்குள் சிக்கியுள்ளமை தொடர்பில் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. இலங்கையில் மட்டும் அல்லாது மாலைத்தீவு போன்ற நாடுகளிலும் கடன் பொறிகளைப் பயன்படுத்தி சீனா தந்திரோபாயமாக நிலைகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை 99 வருட குத்தகைக்கு பெற்றுக்கொள்வதற்கு கடன் பொறியை பயன்படுத்தியமை உலகளாவிய ரீதியில் தமது ஆதிக்கத்தை மேலோங்கச்செய்யும் சீனாவின் முயற்சிக்கு சிறந்த உதாரணம் என அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டுள்ளது. இலங்கை, இந்தியா, சீனா மற்றும் மேற்கத்தைய நாடுகளின் அதிகாரிகளுடன் பல மாதங்களாக நடத்தப்பட்ட நேர்காணல்கள் மற்றும் துறைமுகத் திட்டத்திற்குரிய உடன்படிக்கைகள் மற்றும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த புலனாய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சிறிய நாடுகளில் சீனாவும் சீன நிறுவனங்களும் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்தும் விதம் இந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடலின் போது தெரியவந்ததாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கடன் உதவிகள் எனும் போர்வையில் ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள் போன்ற வளங்கள் இராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படலாம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த திட்டத்திற்கான முதலாவது கடன் தவணையான 307 மில்லியன் டொலரை சீனாவின் எக்ஸிம் வங்கி (Exim Bank) வழங்கியிருந்தது. எனினும், இந்த கடனைப் பெற்றுக்கொள்வதற்கு சீன அரசாங்கம் பரிந்துரைத்த சைனா ஹாபர் (China Harbour) நிறுவனத்திற்கு துறைமுக நிர்மாணப் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும் என சீன அரசாங்கம் நிபந்தனை விதித்திருந்ததாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சீனாவின் கடன் உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்காக இத்தகைய நிபந்தனை விதிக்கப்படுகின்றமை வழமையான செயற்பாடாக மாறியுள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. சீனாவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஸவிற்கும் இடையில் நெருங்கிய உறவு இருந்ததாகவும் 2015 ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய போது, முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களுக்கு பெருந்தொகை பணம் கிடைத்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Standard Chartered வங்கியில் China Harbour நிறுவனம் நடத்திச்சென்ற வங்கி கணக்கின் ஊடாக 7.6 மில்லியன் டொலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு அவருக்கு நெருங்கியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக காசோலைகள் மூலம் 3.7 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதுடன், பிரசார தகவல் அடங்கிய T-shirt களை கொள்வனவு செய்வதற்காக 6 இலட்சத்து 78 ஆயிரம் டொலர்களும் சேலைகள் மற்றும் வேறு அன்பளிப்பு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2 இலட்சத்து 97 ஆயிரம் டொலர்களும் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரசாரத்திற்கு உதவிய பிரபல பௌத்த துறவி ஒருவருக்கு 38,000 டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1.7 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இரண்டு காசோலைகள் அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. China Harbour நிறுவனத்திற்கு சொந்தமான உப வங்கி கணக்கான HPDP Phase 2 என பெயரிடப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக திட்ட கணக்கின் ஊடாகவே பணம் செலுத்தப்பட்டுள்ளது.