குசல் ஜனித் பெரேரா குணமடைந்து வருவதாக அறிவிப்பு

குசல் ஜனித் பெரேரா குணமடைந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பு

by Staff Writer 26-06-2018 | 7:36 PM
Colombo (News 1st)  மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களத்தடுப்பின் போது விபத்திற்குள்ளான குசல் ஜனித் பெரேரா குணமடைந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், அவர் போட்டியில் பங்கேற்பாரா, இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த குசல் ஜனித் பெரேரா விபத்தை எதிர்நோக்கினார். குசல் ஜனித் பெரேரா மைதான எல்லையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகையின் இரும்புக்கம்பியில் மோதி கீழே வீழ்ந்தார். இதனையடுத்து, அம்பியூலன்ஸ் வாகனத்தில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவருக்கு அங்கே உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. குசல் ஜனித் பெரேராவுக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அவருக்கு பாரதூரமான காயம் ஏதும் ஏற்படவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஆட்டம் ஆரம்பமாகும் முன்னர் குசல் ஜனித் பெரேராவின் உடற்தகுதியை பரிசீலித்த பின்னர் அவரை போட்டியில் இணைத்துக்கொள்வதா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணியளவில் ஆரம்பமாகின்றது. போட்டியில் 144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலளித்தாடும் இலங்கை, 5 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களை மூன்றாம் நாள் முடிவில் பெற்றிருந்தது. இதற்கமைய, இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு மேலும் 63 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.