கீத் நொயார் கடத்தல்: கருணாசேகரவிற்கு விளக்கமறியல்

கீத் நொயார் கடத்தல்: முன்னாள் இராணுவப் படைகளின் பிரதம அதிகாரிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 26-06-2018 | 6:38 PM
Colombo (News 1st)  ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச்சென்று தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல், முன்னாள் இராணுவப் படைகளின் பிரதம அதிகாரி, அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய வழக்கு விசாரணையின் போது 8 ஆவது சந்தேகநபரான அமல் கருணாசேகர, சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. சந்தேகநபர் சார்பில் அதிகாரிகள் மருத்துவ அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளனர். சந்தேகநபருக்கு பிணை வழங்க வேண்டாமென அரச தரப்பு சிரேஸ்ட சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம மன்றில் கோரிக்கை விடுத்தார். சந்தேகநபர் 3 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதிவாதி தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி ​ஷெஹான் சில்வா, அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார். இரு தரப்பினரதும் கோரிக்கைகளை ஆராய்ந்த கல்கிசை மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க, சந்தேகநபரை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச்சென்று , தொம்பே பதுவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் தடுத்து வைத்து தாக்கியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணைகளில் தெரியவராத சில விடயங்களை தெளிவுபடுத்திக்கொள்வதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவிடம் சில தகவல்கள் கோரப்பட்டாலும் தேசிய பாதுகாப்பு கருதி அந்த விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது என இராணுவ புலனாய்வுப் பிரிவு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. இன்றைய வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற தீர்ப்புக்கிணங்க, இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஆகியோர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவானின் உத்தியோகப்பூர்வ அறையில் கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் சுமார் ஒன்றரை மணித்தியாலம் நீடித்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.