குகைக்குள் சிக்கிய குழுவைத் தேடும் பணிகள் ஆரம்பம்

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய இளைஞர் குழுவைத் தேடும் பணிகள் ஆரம்பம்

by Chandrasekaram Chandravadani 25-06-2018 | 4:45 PM
தாய்லாந்தின் வடக்குப் பகுதியிலுள்ள குகை ஒன்றுக்குள் சிக்கியுள்ளதாகக் கருதப்படும் 12 பேர் அடங்கிய பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது கால்பந்தாட்ட பயிற்றுநரையும் தேடும் பணிகள் ஆரம்பித்துள்ளன. நேற்று முன்தினம், சியாங் ராய் மாகாணத்திலுள்ள தாம் லுவாங் நாங் நோன் என்ற குகைக்குள் 11 மற்றும் 16 வயதுடைய பாடசாலை மாணவர்களும் அவர்களது கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளரும் நுழைந்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர். கடும் மழை பெய்ததன் பின்னர் இவர்கள் குகைக்குள் சிக்கியிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவித்துள்ளன. தாய்லாந்தில் எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை தொடரும் மழைக் காலத்தில், 16 அடி அளவில் வௌ்ளம் ஏற்பட்டால் குறித்த குகை மூழ்கக்கூடும் என பொலிஸ் கொலனியல் கொம்சான் சார்ட்லுயான் தெரிவித்துள்ளார். குகையின் வௌிப்புறத்திலிருந்து சைக்கிள்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் தான் மிகவும் கூர்மையாக செயற்படுவதாகக் கூறிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பிரவிட் வொன்ங்சுவான், காணாமல்போன குழுவினர் கண்டுபிடிக்கப்படுவார்கள் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார். நீரோடை ஒன்றைக் கடந்ததன் பின்னரே குறித்த குகைக்குள் நுழைய முடியும் என பேங்கொக் 'போஸ்ட் பத்திரிகை' குறிப்பிட்டுள்ளது.