FIFA வரலாற்றில் இங்கிலாந்து சாதனை

FIFA வரலாற்றில் இங்கிலாந்து சாதனை

by Staff Writer 24-06-2018 | 10:29 PM
உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் பனாமாவுக்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் 6 க்கு ஒன்று எனும் கோல் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றியீட்டியது. இது இந்தமுறை உலகக் கிண்ணத் தொடரின் போட்டி ஒன்றில் ஓர் அணி போட்ட அதிகபட்ச கோல்களாகும். ஜி குழுவுக்கான இந்தப் போட்டி Nizhny Novgorod மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை சவாலாக ஆரம்பித்த இங்கிலாந்து முதல் பாதியில் கோல் மழை பொழிந்தது. 8 ஆவது நிமிடத்தில் ஜோன் ஸ்டோன் பந்தை தலையால் முட்டி முதல் கோலைப் போட்டார். 22 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஹெரி கேனும், 36 ஆவது நிமிடத்தில் லிங்கர்டும் கோலடிக்க இங்கிலாந்தின் ஆதிக்கம் மேலோங்கியது. 40 ஆவது நிமிடத்தில் ஜோன் ஸ்டோன் மீண்டும் கோலடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 45 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஹெரி கேன் கோலடிக்க இங்கிலாந்து 5 க்கு பூஜ்ஜியம் எனும் கோல் கணக்கில் முதல் பாதியை முடித்தது. இது இம்முறை உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் முதல் பாதியில் ஓர் அணி பெற்ற அதிகபட்ச கோல் எண்ணிக்கையாகும். இரண்டாம் பாதியில் 62 ஆவது நிமிடத்தில் ஹெரி கேன் ஹெட்ரிக் கோலடிக்க இங்கிலாந்து அணியின் கோல் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. கடும் பிரயத்தனத்துக்கு பின்னர் பனாமா அணி சார்பாக 78 ஆவது நிமிடத்தில் பஹோலி கோல் போட்டார். 6 க்கு ஒன்று எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்ற இங்கிலாந்து இரண்டாம் சுற்றை உறுதிசெய்தது. இதன்படி ஜி குழுவிலிருந்து இங்கிலாந்து மற்றும் பெல்ஜிய அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்றன.