by Staff Writer 24-06-2018 | 9:07 AM
Colombo (News 1st) நாட்டின் 8 மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால், மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர், வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இம் மாதத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பிரஷீலா சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பருவப் பெயர்ச்சி மழை காரணமாக டெங்குக் காயச்சல் வேகமாக பரவியுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, புத்தளம், குருநாகல், கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மேல் மாகாணம் மற்றும் கண்டி மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, நுளம்புகள் பரவும் வகையில் காணப்பட்ட பல பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.