கொஸ்கொட தாரக அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு!

மாத்தறை நகரில் இடம்பெற்ற பொலிஸ் - கொள்ளைக்கும்பல் மோதலின் சந்தேகநபர்களுள் ஒருவரான பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கொஸ்கொட தாரக அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு...

by Staff Writer 24-06-2018 | 6:52 PM

கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கொஸ்கொட தாரக உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவர் இன்று அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

நேற்று கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த காலி பிரதான நீதவான் நிஷாந்த பீரிஸ் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அன்றைய தினத்தில் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவும் பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபர்கள் மாத்தறை நகரில் தங்காபரண விற்பனை நிலையமொன்றை கொள்ளையிட வந்த நிலையில் பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர். இதேவேளை,கொள்ளையர்களை பிடிக்குமாறு உயர் அதிகாரி விடுத்த உத்தரவிற்கு அமைய உடனடியாக செயற்பட்டு உயிரை தியாகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன.