குண்டுத் தாக்குதல் கோழைத்தனமான செயல் - எம்மர்சன்

குண்டுத் தாக்குதல் கோழைத்தனமான செயல் - ஸிம்பாப்வே ஜனாதிபதி

by Staff Writer 24-06-2018 | 10:51 AM
தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் 'கோழைத்தனமான செயல்' என ஸிம்பாப்வே ஜனாதிபதி எம்மர்சன் நங்கங்வா (Emmerson Mnangagwa) கண்டனம் தெரிவித்துள்ளார். ஸிம்பாப்வேயின் புலவாயோ நகரில் நேற்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் ஜனாதிபதி மயிரிழையில் உயிர்தப்பியபோதிலும் துணை ஜனாதிபதி கெம்போ மொகாடி, அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் காயமடைந்த அனைவருக்காகவும் பிரார்த்திப்பதாகவும் இவ்வாறான கொடூரச் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாதெனவும் எம்மர்சன் தனது டவிட்டரில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்தும் ஐக்கியமாகவும் சமாதானத்துடனும் இருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, வன்முறைக்கு தக்கபதிலாக சமாதானமும் வெறுப்புக்கான பதிலாக அன்பும் அமைந்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்லுக்கான பிரசாரக் கூட்டத்தின்போதே குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசியல் சாதுரியத்தினால் 'முதலை' என அழைக்கப்படும் எம்மர்சன், முன்னாள் ஜனாதிபதி ரொபட் முகாபேயின ஆட்சிக் காலத்தில் துணை ஜனாதிபதியாகப் பதவி வகித்துள்ளார். அத்தோடு, சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இராணுவப் பயிற்சி பெற்றுள்ள இவர் 1960 மற்றும் 1970 களில் நடைபெற்ற ஸிம்பாப்வே விடுதலைப் போரில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.