முறிகள் மோசடி: விசாரணை அறிக்கையிலுள்ள இணைப்புகளைப் பகிரங்கப்படுத்துமாறு கடிதம் அனுப்பியதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு

முறிகள் மோசடி: விசாரணை அறிக்கையிலுள்ள இணைப்புகளைப் பகிரங்கப்படுத்துமாறு கடிதம் அனுப்பியதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு

முறிகள் மோசடி: விசாரணை அறிக்கையிலுள்ள இணைப்புகளைப் பகிரங்கப்படுத்துமாறு கடிதம் அனுப்பியதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Jun, 2018 | 11:14 am

Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள இணைப்புகளைப் பகிரங்கப்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக சட்டமாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ விடுத்த வேண்டுகோளுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாக சட்டமாஅதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஒருசில இணைப்புகளைக் பகிரங்கப்படுத்தினால் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இடையூறு ஏற்படலாம் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சில இணைப்புக்களைப் பகிரங்கப்படுத்துவதன் மூலம் விசாரணைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என தமது கடிதத்தில் ஜனாதிபதி செயலாளரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாக சட்டமாஅதிபர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இலங்கை மத்திய வங்கி மற்றும் நாணயச்சபை சமர்ப்பித்துள்ள இரகசிய ஆவணங்களைப் பகிரங்கப்படுத்துவது தொடர்பில் குறித்த நிறுவனங்களிடம் ஆலோசனை பெறவேண்டியுள்ளதாகவும் தமது கடிதத்தில் அறிவித்துள்ளதாக ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழு அறிக்கைக்கு மூன்றாம் தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தொடர்பில் தனித்தனியாக பரிந்துரைகளைப் பெறவேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆணைக்குழுவின் இணைப்புக்களைப் பகிரங்கப்படுத்துவது தொடர்பில் சட்டமாஅதிபரின் ஆலோசனையுடன் கூடிய கடிதம் கடந்த வௌ்ளிக்கிழமை ஒஸ்டின் பெர்ணான்டோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொள்ளும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் சட்டமாஅதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்