விதிமுறைகளை மீறி கடலட்டை பிடித்தால் அனுமதி இரத்து 

வடமராட்சி கிழக்கில் விதிமுறைகளை மீறி கடலட்டை பிடிப்போரின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய தீர்மானம்

by Bella Dalima 23-06-2018 | 7:38 PM
Colombo (News 1st)  யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் விதிமுறைகளை மீறி கடலட்டை பிடிப்போரின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிற்கும் இடையில் நேற்று (22) நடைபெற்ற சந்திப்பில் வடமராட்சி கடற்பரப்பில் விதிமுறைகளை மீறி கடலட்டை பிடிப்போரின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இரவில் மாத்திரமே கடலட்டை பிடித்தல், கரையிலிருந்து 5 கிலோமீற்றருக்கு அப்பால் கடலட்டை பிடித்தல் ஆகிய விதிமுறைகளை மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், இல்லை எனின் அவர்களுடைய அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக கடற்றொழில் அமைச்சர் விரைவில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.