மாத்தறை துப்பாக்கிச்சூடு: மூவருக்கு விளக்கமறியல்

மாத்தறையில் பொலிஸாருடன் பரஸ்பர துப்பாக்கிச்சூடு: கைதான மூவருக்கு விளக்கமறியல்

by Bella Dalima 23-06-2018 | 8:34 PM
Colombo (News 1st) மாத்தறையில் பொலிஸாருடன் நேற்று (22) இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட கொஸ்கொட தாரக்க உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் பொலிஸ் பாதுகாப்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சாமர இந்திரஜித் என்ற சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் மறைத்து வைத்துள்ளதாகக் கூறப்படும் பையொன்றை தேடுவதற்காக மாத்தறை கிருல பகுதிக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டினை எடுத்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். உயிரிழந்த சாமர இந்திரஜித் என்ற இந்நபர் கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் பலவற்றுடன் தொடர்புபட்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்தணகல இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம், நிட்டம்புவையில் தாய் மற்றும் மகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு, உதம்மிட்ட சாமரே என்ற நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் 2012 ஆம் ஆண்டு பேலியகொடயில் இடம்பெற்ற 12 கோடி ரூபா கொள்ளையுடன் இவர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, மாத்தறை மோதல் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் W.G.P.N. வீரசிங்கவின் பூதவுடலுக்கு, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பூதவுடல் மாத்தறையிலுள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்த சிறிய வகை தானியங்கி துப்பாக்கி தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.