பணிப்பகிஷ்கரிப்பால் 4,000 கடிதங்கள் தேக்கம்

தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பால் கட்டுநாயக்கவில் தேங்கிய 4,000 கடிதங்கள்

by Staff Writer 23-06-2018 | 10:03 AM
Colombo (News 1st) தபால் தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 4,000 கடிதங்கள் தேங்கியுள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவிக்கின்றது. அத்துடன், கொழும்பு மத்திய தபால் நிலையம் உள்ளிட்ட அனைத்து நிலையங்களிலும் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். இந்தநிலையில், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களின் பிரதான கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்தது. ஊழியர்களுக்கு உரிய தீர்வை வழங்கியபோதிலும் பணிப்பகிஷ்கரிப்பைத் தொடர்கின்றமை நியாயமற்றது என தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீம் கூறினார். தபால் ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்தும் தொழிற்சங்கத்தினருடன் கலந்துரையாடியதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அமைச்சினால் சில திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதியை ஓய்வூதிய திணைக்களம் வழங்கியதன் பின்னர், அமைச்சரவையின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அமைச்சர் அப்துல் ஹலீம் சுட்டிக்காட்டினார். எனினும், ஓய்வூதியத் திணைக்களத்தின் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதுடன், அதன்போதே இதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதனால் பணிப்பகிஷ்கரிப்பைத் தொடர்ந்தும் முன்னெடுப்பது, நியாயமற்றது என தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.