சந்திமாலின் மேன்முறையீடு நிராகரிப்பு

சந்திமாலின் மேன்முறையீட்டு மனு சர்வதேச கிரிக்கெட் பேரவையால் நிராகரிப்பு

by Staff Writer 23-06-2018 | 8:31 AM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு விதிக்கப்பட்ட போட்டித்தடை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சட்டப்பிரிவு ஆணையகத்தின் தவிசாளர், சட்டத்தரணி மைக்கல் பெலொப் தலைமையில் நேற்றைய தினம் மேன்முறையீடு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டபோதே, குறித்த மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுக்க விதிக்கோவையின் 2ஆம் சரத்தில் 2, 9 பிரிவை மீறியமையால் விதிக்கப்பட்ட தண்டனை அமுல்படுத்தப்படுகின்றது. இன்று ஆரம்பமாகவுள்ள மேற்கிந்தியத்தீவுகளுடனான முன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை தினேஷ் சந்திமால் இழந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் இலங்கை அணியை சுரங்க லக்மால் வழிநடத்தவுள்ளார். இதேவேளை, விளையாட்டின் மகத்துவத்தைப் பாதிக்கும் வகையில் செயற்பட்டதாக இலங்கை அணியின் தலைமை பயிற்றுநர் சந்திக ஹத்துருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பிலான விசாரணை அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் மகத்துவத்தைப் பாதிக்கும் வகையில் செயற்படுதல் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறையில் மூன்றாம் பிரிவில் அடங்கும் குற்றமாகும். அந்தப் பிரிவில் குறைந்தபட்சமாக 4 தண்டனைப் புள்ளிகளும் அதிகபட்சமாக 8 தண்டனைப் புள்ளிகளும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.