ஆலையடிவேம்பு தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவர் கைது

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவர் கைது

by Staff Writer 22-06-2018 | 7:30 PM
Colombo (News 1st) அக்கரைப்பற்று - ஆலையடிவேம்பில் கடந்த திங்கட்கிழமை (18) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நபரால் அடையாளம் காட்டப்பட்ட நிலையில், இன்றைய தினம் பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். இதேவேளை, சம்பவம் தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் இரண்டு உறுப்பினர்களை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இருவரும் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் கே.பேரின்பராஜா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதை அடுத்து அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆலையடிவேம்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று வலுப்பெற்றது. ஆலையடிவேம்பு பொத்துவில் வீதியின் 40 ஆம் கட்டைப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரு தரப்பினரிடையே மோதல் இடம்பெற்றது. இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி அக்கரைப்பற்று - பட்டின ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்டின ஜூம்மா பள்ளிவாசலிலிருந்து அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக் குழுவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீடித்ததுடன், ஆர்ப்பாட்டத்தில் 50 பேர் வரை கலந்து கொண்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இணக்கப்பாட்டு சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகரின் சார்பில் மகாஓயா உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்தன் கோடீஸ்வரன், அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் அதாவுல்லா அஹமட் ஷக்கி, ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உதவி தவிசாளர், ஆலய பரிபாலகர்கள், அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர், சமூக நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.