த.தே.கூவிற்கு எனது அமைச்சை வழங்கத் தயார்: மனோ 

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயார் என்றால் எனது அமைச்சை வழங்கத் தயார்: மனோ கணேசன்

by Bella Dalima 22-06-2018 | 8:20 PM
Colombo (News 1st)  தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயார் என்றால் தனது அமைச்சை வழங்கத் தயார் என தேசிய கலந்துரையாடல், நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைந்து அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளும் படி பகிரங்க அழைப்பு விடுக்க விரும்புவதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நல்லிணக்கம் மாத்திரமல்ல அபிவிருத்தியும் தேவை என்பதைத் தாம் உணர்வதாகவும் அவர் கூறினார்.
வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் தலைவர்கள் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர்களாக இருக்கின்றார்கள். அதன் மூலம் முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கத்தின் வளங்கள் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன. சம்பந்தன் அரசாங்கத்துடன் இணைவாரானால் அவரின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாகும். பாராளுமன்றத்தில் இருக்கும் அதிக எண்ணிக்கை கொண்ட எதிர்க்கட்சி குழுவிற்கு அது வழங்கப்படும். அது பிரச்சினை இல்லை
என மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற இரண்டாம் மொழி கல்வியை பூர்த்தி செய்த அரச அதிகாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்விடயங்களைக் கூறினார்.