கடிதங்களை விநியோகிக்க பொலிஸாரின் உதவி

கடிதங்களை விநியோகிக்க தேவையேற்படின் பொலிஸாரின் உதவியை நாடவுள்ளதாக அமைச்சு அறிவிப்பு

by Staff Writer 22-06-2018 | 3:49 PM
Colombo (News 1st)  கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைக்கு தேவையேற்படும் பட்சத்தில் பொலிஸாரின் உதவியை நாடவுள்ளதாக தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஊழியர்களுக்கு உரிய தீர்வை வழங்கிய போதிலும், பணிப்பகிஷ்கரிப்பை தொடர்கின்றமை நியாயமற்றது என அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார். தபால் ஊழியர்கள் இன்று 12 ஆவது நாளாக பணிப்பகிஷ்ப்பில் ஈடுபட்டுள்ளனர். பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள யாழ். தபால் ஊழியர்கள் இன்று யாழ். பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை ஊழியர்கள் சில பகுதிகளில் எதிர்ப்புப் பேரணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். வவுனியா தபால் ஊழியர்கள் இன்று காலை வவுனியா தபால் நிலையத்திலிருந்து பழைய பஸ் நிலையம் வரை பேரணியாக சென்றுள்ளனர். இதன் பின்னர், மீண்டும் கண்டி வீதி வழியாக புதிய பஸ் நிலையத்தை வந்தடைந்த தபால் ஊழியர்கள், அங்கிருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை பேரணியாகச் சென்றுள்ளனர். இதேவேளை, புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் சிலாபம் பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.