அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பு

அமெரிக்க பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று முதல் அமல்

by Bella Dalima 22-06-2018 | 6:12 PM
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைக்கு எதிராக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 2.8 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீல ஜீன்ஸ், மோட்டார் சைக்கிள்கள், போர்போன் விஸ்கி போன்ற பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு பொருட்கள் மீது 25%, அலுமினியப் பொருட்கள் மீது 10% என்று வரிவிதிப்பதாக கடந்த மார்ச் மாதம் டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து, தென்கொரியா, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் உலோகங்களின் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க இணங்கின. ஜூலை 1 முதல் 16.6 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான அமெரிக்க சரக்குகள் மீது வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்தது. இரு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து வரும் ஸ்டீல், பன்றி இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் மீது மெக்சிகோ வரி விதித்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த கால நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரி விதிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் க்ளொட் ஜன்கர் தெரிவித்துள்ளார்.