பொதுமக்களைத் தாக்கிய சிறுத்தை அடித்துக் கொலை

கிளிநொச்சியில் பொதுமக்களைத் தாக்கிய சிறுத்தையை அடித்துக்கொன்ற இளைஞர்கள்

by Bella Dalima 21-06-2018 | 7:22 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தை தாக்கியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அம்பாள்குளம் பகுதியில் இன்று அதிகாலை முதல் பொதுமக்களை சிறுத்தையொன்று தாக்கி வந்துள்ளது. மக்கள் குடியிருப்பிற்குள் நுளைந்த சுமார் 4 அடி நீளமான சிறுத்தை தாக்கியதுடன், அவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பில் கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் மக்கள் முறைப்பாடு செய்ததுடன், ஊழியர்களால் சிறுத்தையை பிடிக்க முடியாது போயுள்ளது. சிறுத்தையை மயக்க மருந்தேற்றி பிடிப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முயற்சி எடுத்த போதிலும், அது பலனளிக்காத நிலையில் அவர்கள் அங்கிருந்து வௌியேறியுள்ளனர். வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் உட்பட சிலரை சிறுத்தை தாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்போது சிறுத்தை தாக்க முற்பட்டபோது வேறு வழியின்றி இளைஞர்கள் குறித்த சிறுத்தையை தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டது. அத்துடன் சிறுத்தை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஹட்டன் - பன்மூர் தோட்டத்தில் சிறுத்தையொன்று தொழிலாளர்களை தாக்கியதில், ஜனவரி மாதம் 7 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. தாக்குதலை மேற்கொண்ட சிறுத்தையை இதுவரை பிடிக்கவில்லை. இதனால் தொடர்ந்தும் அப்பகுதி மக்கள் அச்சத்தின் மத்தியிலே வாழ்ந்து வருகின்றனர்.  

ஏனைய செய்திகள்