கறுப்புப்பணத்தை தூய்தாக்குமிடமாக இலங்கை மாறுகிறதா?

கறுப்புப் பணத்தை தூய்தாக்கும் இடமாக இலங்கை மாறுகிறதா?

by Staff Writer 21-06-2018 | 8:20 PM
Colombo (News 1st)  கடந்த வருடம் நவம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி மாற்றச் சட்டம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்களே இதற்கு காரணமாக அமைந்தன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் அது 2017 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் FATF எனும் சர்வதேச நிறுவனம் இலங்கையை நிதி தூய்தாக்கலுக்கான அதிக வாய்ப்புள்ள நாடாக பட்டியலிட்டது. புதிய சட்டத்தின் கீழ் விதிக்கப்படுகின்ற அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட அமைச்சரின் அறிவிப்பிற்கு அமைய தீர்மானிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வணிக சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜெயரத்ன நியூஸ்ஃபெஸ்டிற்கு கூறினார். வௌிநாட்டு நாணயத்தை நாட்டிற்கு கொண்டு வரும் போது எவ்வித விசாரணையும் இன்றி எடுத்து வருவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வௌிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை தூய்தாக்கும் இடமாக இலங்கை மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அரசாங்கம் என்ற வகையில் தேசிய பொருளாதாரத்தை விரிவான எதிர்கால நோக்குடன் வழி நடத்த வேணடும். அரசியல்வாதிகள் மாத்திரம் அல்லாது முக்கிய வர்த்தகர்களும் வேறு நாடுகளில் பணத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றுவதன் ஊடாக அல்லது பயன்படுத்துவதன் மூலம் மறைக்க முடியும் என நம்பினால் தற்போதைய பணப்பரிமாற்றத்தை ஆராய்ந்து தகவல்களை அறிய முடியும். ஊழல்வாதிகளும் மோசடியில் ஈடுபட்டவர்களும் ஆட்சிக்கு வந்ததால் இத்தகைய நிலை நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.