இந்தியாவில் கடும் மழை: 3 இலட்சம் பேர் பாதிப்பு

இந்தியாவில் கடும் மழை: மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

by Staff Writer 21-06-2018 | 10:59 AM
இந்தியாவில் பெய்து வரும் பருவ மழை காரணமாக அசாம் மாநிலத்தின் ஹைலகெண்டி மாவட்டத்தில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக துணை ஆணையாளர் அதில் கான் (Adil Khan) தெரிவித்துள்ளார். நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக மாநில அனர்த்த நிவாரணப்படை மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவப்படை என சுமார் 10 குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம், திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளதோடு, சுமார் 8 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, கடும் மழை காரணமாக அமெரிக்காவின் டெக்சாஸ் வளைகுடா மற்றும் அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதிகளிலுள்ள ஆறுகள் நிரம்பியுள்ளதால் குறித்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு, தெற்கு டெக்சாஸ் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன், குறித்த பகுதியில் இந்த வாரத்தில் மட்டும் சுமார் 15 செ.மீ. க்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. டெக்சாஸை விட மெர்செட்ஸில் கூடுதலான மழை பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மீட்புப் பணிகளில் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.