by Staff Writer 21-06-2018 | 1:55 PM
Colombo (News 1st) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த பொறுப்பாளராக பேராசிரியர் உமா குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தென்கிழக்குப் பல்கலையின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.
அதற்கமைய, பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த பொறுப்பாளராக உமா குமாரசுவாமி கடமைகளைப் பொறுப்பேற்றதாக பதிவாளர் கூறினார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பாலின சமத்துவப் பிரிவின் பணிப்பாளராக செயற்பட்டுவந்த நிலையில், அவருக்கு இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அண்மையில் அவர் இராஜினாமா செய்ததுடன், பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவியேற்றார்.
இந்த நிலையில், புதிய உபவேந்தர் ஒருவரை உத்தியோகபூர்வமாக நியமிக்கும் வரை பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த பொறுப்பாளரை நியமிக்க உயர் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
அதற்கமைய, பேராசிரியர் உமா குமாரசுவாமி இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இரண்டு தடவைகள் உபவேந்தராகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகுவாய்ந்த பொறுப்பாளராக ஒரு வருடமும் பேராசிரியர் உமா குமாரசுவாமி செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.