தபால் ஊழியர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கத் திட்டம்

தபால் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கத் திட்டம்

by Staff Writer 20-06-2018 | 8:35 AM
Colombo (Nesw 1st) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை அதிகாரிகள் தீர்வு பெற்றுக்கொடுக்காமையினால், தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக்குவதற்குத் தீர்மானித்ததாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் தபால் திணைக்களத்தின் இணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர்களின் உதவியைப்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தபால் திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முற்றாக தடைப்பட்டுள்ளன. கடிதங்களை பிரித்தல், பற்றுச்சீட்டு வழங்குதல், விவசாயிகள் மற்றும் ஏனையவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் தபால் நிலையங்களினூடாகவே முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் பரீட்சைகளுக்கான விண்ணப்பப்படிவங்களை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.