நாணய மாற்று விகிதத்தைத் தீர்மானிக்கும் காரணிகள்

நாணய மாற்று விகிதத்தைத் தீர்மானிக்கும் காரணிகள்

by Bella Dalima 20-06-2018 | 9:55 PM
Colombo (News 1st) முக்கிய காரணங்கள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் நாணய மாற்று விகிதம் தீர்மானிக்கப்படுகின்றது. வட்டி வீதம், சென்மதி நிலுவை, அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடன் அளவு, பண வீக்கம் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை என்பன இதில் அடங்குகின்றன. வட்டி வீதம் நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய முறிகள் மோசடி தொடர்பில் கடந்த 32 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டாலும் அதனால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு மதிப்பீடு செய்யப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற முறிகள் கொடுக்கல் வாங்கலின் போது 10 பில்லியன் ரூபாவிற்கான முறிகள் 30 ஆண்டு காலத்திற்காக விநியோகிக்கப்பட்டன. இந்த ஊழல் மிகு கொடுக்கல் வாங்கல் காரணமாக நாட்டின் வட்டி வீதம் 3.15 வீதத்தால் அதிகரித்தமை அனைவரும் அறிந்த விடயமாகும். 2014 ஆம் அண்டு நடுப்பகுதியில் நாட்டின் வட்டி வீதம் குறைவடைந்து வந்தது. சர்ச்சைக்குரிய முறிகள் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற ஒரு வாரத்திற்கு முன்னதாக இடைநிலை சந்தையில் காலாண்டு முறிகளுக்கான வட்டி வீதம் 5.86 ஆகக் காணப்பட்டது. ஒரு வருட முறிகள் விநியோகத்திற்காக 6.1வீதமும் 30 வருடத்திற்காக 9.48 வீதமும் காணப்பட்டது. 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி முறிகள் ஏலத்திற்கு முன்னதாக வட்டி வீதம் 9.35 ஆக அமைந்திருந்தது. சென்மதி நிலுவையில் மாற்றங்கள் இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, 2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் ஏற்றுமதி 7.7 வீதத்தால் அதிகரித்துள்ளது. அதன் பெறுமதி 2,989 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த வருடம் குறித்த காலப்பகுதியில் ஏற்றுமதி 2,774 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது. இறக்குமதி 13.1 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் அதன் பெறுமதி 5,971 மில்லியன் அமெரிக்க டொலராக அமைந்துள்ளது. கடந்த வருடம் இறக்குமதி செலவு 5,279 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவானது. இதற்கமைய, 2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வர்த்தக இடைவௌி 2,989 அமெரிக்க டொலராக அமைந்தது. ஏனைய நாடுகளில் டொலரின் தாக்கம் கடந்த வருடம் அமெரிக்கத் தேர்தலை அடுத்து உலகின் அநேகமான நாடுகளின் நாணயப் பெறுமதி வெகுவாகக் குறைவடைந்தது. இலங்கையின் நாணயப் பெறுமதி குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி காணாவிட்டாலும், முறிகள் மோசடியால் இத்தகைய நிலை ஏற்பட்டமை தௌிவாகின்றது. அரசாங்கத்திடம் பொருளாதாரத்தை முகாமைத்துவத்திற்கு உட்படுத்தும் இயலுமை இருந்திருந்தால் பொருளாதார ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் ரூபாவின் பெறுமதி குறைவடைந்திருக்காது. குறிப்பாக ஏற்றுமதியின் போது தேயிலைக்கு விதிக்கப்படுகின்ற செஸ் வரி போன்ற ஏற்றுமதி வரிகளை குறைப்பதன் ஊடாக இலங்கையின் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.