தினேஷ் சந்திமாலுக்குப் போட்டித் தடை

தினேஷ் சந்திமாலுக்குப் போட்டித் தடை

by Staff Writer 20-06-2018 | 5:07 PM
​Colombo (News 1st) இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முழு ஊதியத்தொகையும் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமால் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுக்க விதிக்கோவையின் 2ஆம் சரத்தின் 2, 9 பிரிவை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை குற்றஞ்சுமத்தியது. இந்தப் போட்டியின் நிறைவுக்கு பின்னர் நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் தலைமையில் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்தது. இதனையடுத்து, இலங்கை அணித்தலைவர் பந்தின் தன்மையை மாற்றியமைக்கும் காணொளியும் வெளியானது. இதன்படி, தினேஷ் சந்திமால், நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் தலைமையில் விசாரணை குழாத்தில் ஆஜராகியிருந்தார். இந்தப் போட்டியின்போது தினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முழு ஊதியத்தொகையும் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையையடுத்து, தினேஷ் சந்திமாலுக்கு மேற்கிந்தியத்தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2.21 சரத்தின் பிரகாரம் கிரிக்கெட்டின் மகத்துவத்தை பாதுகாக்க தவறியமைக்காக இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க மற்றும் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்படவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியை குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆரம்பிக்க தவறியமையினாலேயே அவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.