Colombo (News 1st) யுத்தத்தால் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு பாகுபாடின்றி இழப்பீடு வழங்குவது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கு இம்முறையும் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையை நிறைவேற்றும் வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகுபாடின்றி இழப்பீடு வழங்குவதற்கு ஏதுவாக, நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளை சீர்திருத்துவதே இந்த அமைச்சரவைப் பத்திரத்தின் நோக்கமாகும்.
கடந்த வாரம் கூடிய அமைச்சரவை இந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை.
அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பில் கிளிநொச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வொன்றில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கவலை வௌியிட்டார்.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு அமைய, சில திருத்தங்களுடன் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் அந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், இதன்போதும் அந்த அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்படவில்லை.
இதேவேளை, தமிழ் மக்கள் மத்தியில் தன்னை கெட்டவனாக சித்தரிக்கும் முயற்சி இடம்பெறுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தாம் நிராகரித்ததாக பிரசாரம் செய்யப்பட்டுள்ளதென ஜனாதிபதி கூறியதாக இன்றைய வீரகேசரி பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
இதன் காரணமாக துரிதகதியில் இழப்பீடுகளை வழங்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி கோரியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இழப்பீடு வழங்கும் வகையில், இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது யோசனை முன்வைத்ததாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் குறித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
யாருடைய தேவைக்காக குறித்த அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்படுகின்றதென கேள்வி எழுப்பப்பட்டது.
டி.எம்.சுவாமிநாதன் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான அமைச்சர் எனவும் அவரின் தேவையை அவர் முன்வைப்பார், அமைச்சரவை அது தொடர்பில் தீர்மானிக்கும் என ராஜித சேனாரத்ன பதிலளித்தார்.
யுத்தத்தில் உயிரிழந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்குவது தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்ட போது, சுமார் 10 பிரிவுகள் அதில் காணப்படுவதாகவும் 'பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பங்களுக்கு' என்பதை நீக்கிவிட்டு ஏனையவற்றை நடைமுறைப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளதாகவும் ராஜித சேனாரத்ன பதிலளித்தார்.