ஐ.நாவிலிருந்து அமெரிக்கா விலகல்

ஐ.நா. பாதுகாப்புப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகல்

by Staff Writer 20-06-2018 | 9:37 AM
ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலுக்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்து பாதுகாப்புப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது. பாதுகாப்புப் பேரவை கடந்த சில வருடங்களில் அலட்சியமாக செயற்பட்டதாகவும் மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பாக மாறியுள்ளதெனவும் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி விமர்சித்துள்ளார். கொங்கோவில் பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும், அந்நாட்டுக்கு உறுப்பினராக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வெனிசூலா மற்றும் ஈரானில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து பொறுப்புடன் அறிக்கையிட ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மனித உரிமை பேரவையிலிருந்து விலகியபோதிலும் மனித உரிமை விடயங்களில் அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுமென்பதை தௌிவாக சுட்டிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மனித உரிமை விடயங்களை கேலிக்கூத்தாகவும் சுயநலமாகவும் பாசாங்காகவும் பயன்படுத்தும் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க தமது அர்ப்பணிப்பு இடமளிக்கவில்லையெனவும் நிக்கி ஹேலி மேலும் குறிப்பிட்டுள்ளார். பாரதூரமான மனித உரிமைகள் விவகாரங்கள் இடம்பெற்றுள்ள நிலையிலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் உறுப்புரிமை கோரும் நாடுகளையும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், பாதுகாப்புப் பேரவையின் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளும் அமெரிக்காவின் முயற்சியை ரஷ்யா, சீனா, கியூபா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தடுத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் அமெரிக்கா தொடர்ந்தும் இணைந்திருப்பதை எதிர்ப்பார்ப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் (António Guterres) தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் விலகல் ஆச்சரியமளிக்காதபோதிலும் எதிர்பார்க்காத ஒன்றென ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஸெய்ட் ராட் அல் ஹுசைன் (Zeid Raad Al Hussein) தெரிவித்துள்ளார்.