வட கொரிய ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்

வட கொரிய ஜனாதிபதி மூன்றாவது தடவையாக சீனாவுக்கு விஜயம்

by Chandrasekaram Chandravadani 19-06-2018 | 3:13 PM
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் சீனாவுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான உச்சிமாநாடு நடைபெற்று ஒரு வார காலத்தின் பின்னர் கிம்மின் பயணம் அமைந்துள்ளது. கொரிய தீபகற்பத்தை அணுவாயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவது தொடர்பில் ட்ரம்புடனான உச்சிமாநாட்டின்போது உத்தரவாதமளித்தமை மற்றும் தடைகள் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. வட கொரியாவின் பொருளாதார நட்பு நாடான பெய்ஜிங், வட கொரியாவுக்கு எதிரான தடைகள் தளர்த்தப்படலாம் என ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதேநேரம், திட்டமிடப்பட்டுள்ள தமது அடுத்த கூட்டு இராணுவப் பயிற்சியை இடைநிறுத்துவதாக அமெரிக்காவும் தென் கொரியாவும் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்க - தென் கொரிய கூட்டு இராணுவப் பயிற்சியை நிறுத்தப்போவதாக, கடந்த 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்ற வட கொரியாவுடனான உச்சிமாநாட்டின்போது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து, கிம்மின் சீனாவிற்கான மூன்றாவது விஜயம் இதுவாகின்றது. கிம்மின் தற்போதைய விஜயம் வழமையானது போன்றது அல்ல எனக் கூறியுள்ள சீன அரச செய்தி நிறுவனம், மேலதிக தகவல்கள் எதையும் குறிப்பிடவில்லை.