மாத்தறை - கொழும்பு பஸ் ஊழியர்கள் பகிஷ்கரிப்பு

மாத்தறை - கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 19-06-2018 | 12:19 PM
Colombo (News 1st) மாத்தறை - கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அம்பலாங்கொடயிலிருந்து குறுந்தூர சேவையில் ஈடுபடும் பஸ்களினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மாத்தறை பயணிகள் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் அருண ஹல்பகே தெரிவித்தார். இந்த விடயம் குறித்து, பல தடவைகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த போதிலும் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். மாத்தறையிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் பஸ் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் நாளை (20) முதல் மாத்தறையிலிருந்து அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் பஸ் ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அருண ஹல்பகே மேலும் குறிப்பிட்டார். இது குறித்து ரத்கம பொலிஸ் உயரதிகாரியொருவரிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது, மாத்தறை - கொழும்பு தனியார் பஸ்கள் மீது ரத்கம, அளுத்கம உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென அவர் கூறினார். இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், முறைப்பாடு மீளப்பெறப்பட்டதால் தமது விசாரணைகளை முடக்கியதாகவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார். மீண்டும் முறைப்பாடு முன்வைக்கப்படும் பட்சத்தில், விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் ரத்கம பொலிஸார் குறிப்பிட்டனர்.