தமிழர் சனத்தொகைக்கேற்ப அமைச்சர்களோ அதிகாரமோ இல்லை

தமிழர் சனத்தொகைக்கேற்ப தமிழ் அமைச்சர்களும் நிறைவேற்று அதிகாரமும் இல்லை: மனோ கணேசன்

by Bella Dalima 19-06-2018 | 8:16 PM
Colombo (News 1st) இலங்கையில் தமிழர் சனத்தொகைக்கேற்ப தமிழ் அமைச்சர்களும் நிறைவேற்று அதிகாரமும் இல்லை என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள சுமார் 70 அரச நிறுவனங்கள் முஸ்லிம் அமைச்சர்கள் வசமுள்ளதாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் சேவைகள் போதாது என முஸ்லிம் மக்கள் தமது அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தாலும் இதுவே உண்மை நிலை என அமைச்சர் கூறியுள்ளார். முஸ்லிம் மக்களை தாம் பாராட்ட விரும்புவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், முஸ்லிம் மக்களை பார்த்து தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சுமார் 200 இலட்சம் மொத்த சனத்தொகையில் சுமார் 150 இலட்சம் சிங்களவர்களும் சுமார் 30 இலட்சம் தமிழர்களும் சுமார் 20 இலட்சம் முஸ்லிம்களும் அடங்குவதாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க வழங்கப்பட்ட சிறுபான்மை இன வாக்குகளில் தமிழர் வாக்குகளே பெரும்பான்மை வாக்குகள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தமிழர்களை பொறுத்தவரையில் மூன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிகளும், ஒரு இராஜாங்க அமைச்சர் பதவியும், மூன்று பிரதி அமைச்சர் பதவிகளும் மாத்திரமே உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களின் வாக்குகளை பயன்படுத்திக்கொள்ளும் அரசாங்கங்கள் தமிழர்களுக்கு உரிய அந்தஸ்தை தருவதில்லை எனவும் ஏற்கனவே இருந்த அரசாங்கங்களும் தற்போதுள்ள அரசாங்கமும் கூட தரவில்லை எனவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக தமிழர்களுக்கு அமைச்சரவை நிறைவேற்று அதிகாரம் போதுமானளவு கிடைப்பதில்லை எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெறுமாறு தாம் அழைப்பு விடுத்தபோது சிலர் அந்த அழைப்பை விமர்சனம் செய்ததாக அமைச்சர் கூறியுள்ளார். இறுதியில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வும் கிடைக்கவில்லை, அபிவிருத்தியும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசில் இணையாவிட்டால் பாராளுமன்றத்தில் இருக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கு மேலதிக அமைச்சுப் பதவிகளையும் நிதி வளத்தையும் ஒதுக்க வேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் நாடு தழுவிய ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ள அமைச்சர், இது தமிழர் மத்தியில் பேசுபொருளாக மாறவேண்டும் எனவும் கூறியுள்ளார்.