மனைவியை வெட்டிக்கொன்றவருக்கு மரணதண்டனை

கொக்கட்டிச்சோலையில் மனைவியை வெட்டிக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை

by Staff Writer 19-06-2018 | 8:03 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பகுதியில் தனது மனைவியை வெட்டிக்கொலை செய்த ஒருவருக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டில் கொக்கட்டிச்சோலை பகுதியில் 8 மாத கர்ப்பிணியான தனது மனைவியை கொலை செய்த குறித்த நபர் கொலையை மறைப்பதற்காக கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த நபரே குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. இதன்போது அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதால், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸர்டீன் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.