குறைந்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி

குறைந்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி: பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்?

by Bella Dalima 19-06-2018 | 8:33 PM
Colombo (News 1st)  நாணய மாற்று விகிதத்திற்கு அமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 161 ரூபா 17 சதம் வரை அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி இன்று தெரிவித்தது. இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களுக்குள் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி 5.44 வீதத்தால் குறைவடைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு 110 ரூபா 95 சதமாகக் காணப்பட்ட அமெரிக்க டொலரின் பெறுமதி 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 152 ரூபா 85 சதம் வரை அதிகரித்தது. பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்வடைதல் எனப்படும் பணவீக்கம், ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றுக்கான இடைவௌி மற்றும் வட்டி வீதம் ஆகியனவே நாட்டின் நாணய மாற்று விகிதத்தை தீர்மானிக்கும் பிரதான காரணிகளாக அமைந்துள்ளன. 100 நாள் அரசாங்கத்தின் கீழ், அப்போதைய மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரன், செயற்கையாக ரூபாவின் பெறுமதியை பேணுவதற்காக நாணயத்தாள்களை அச்சிட்டமையால் 2015 ஆம் ஆண்டின் பின்னர் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்ததாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் இலங்கையின் மொத்த கடன் பெறுமதி 4000 பில்லியனாகக் காணப்பட்டது. 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி நடைபெற்ற முறிகள் கொடுக்கல் வாங்கலின் போது 30 வருட காலத்திற்காக 10 பில்லியன் ரூபா முறிகள் விநியோகிக்கப்பட்டன. இந்த மோசடியான கொடுக்கல் வாங்கலினால் நாட்டின் வட்டி வீதம் 3.15 வீதமாக அதிகரித்தமை முழு நாடும் அறிந்த விடயமாகும். அதன் பிரகாரம், முதலாவது முறிகள் மோசடியினால் நாட்டின் மொத்த கடன் தொகை 126 பில்லியன் ரூபாவால் அதிகரித்ததாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நாணயத்தாள்களை அச்சிட்டமை தற்போது ரூபாவின் பெறுமதி குறைவடைந்தமைக்கு காரணம் என்பது தௌிவாகப் புலப்படுகின்றது. சர்ச்சைக்குரிய முறிகள் கொடுக்கல் வாங்கலின் போது, வட்டி வீதத்தை அதிகரித்தமையினால் ரூபாவின் பெறுமதி குறைவடைந்ததாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் அரசியல்வாதிகளுக்கு இந்த நிலைமையை முகாமைத்துவப்படுத்த முடியாவிடின், அதனை செய்யக்கூடியவர்களுக்கு இந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டுமல்லவா? நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி, தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கும் முட்டாள்தனமான செயற்பாடுகளை தொடர்ந்தும் பொறுத்துக்கொள்ள முடியுமா? இவை அனைத்துக்கும் பொறுப்புக்கூற வேண்டிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனை தற்போது கண்டுபிடிக்க முடியாதுள்ளது. அவரை பதவியில் அமர்த்தி பாதுகாத்த பிரதமர் மௌனமாகவுள்ளார்.