இராணுவத்தினருக்கு அடைக்கலம் கொடுப்பது குற்றம்

கடமைக்கு சமூகமளிக்காதிருக்கும் இராணுவத்தினருக்கு அடைக்கலம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம்

by Staff Writer 19-06-2018 | 4:22 PM
Colombo (News 1st) இராணுவத்திடம் விடுமுறை பெறாது கடமைக்கு சமூகமளிக்காதிருப்போருக்கு அடைக்கலம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற அல்லது விடுமுறை பெறாது கடமைக்கு சமூகமளிக்காத பலர் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளதாக இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளர், பிரிகேடியர் ஏ.எம்.எஸ்.பி. அத்தபத்து விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள், வழிப்பறிக்கொள்ளை மற்றும் சமூகவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளதென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தகர்கள், பாதாள உலகக் குழுவினர், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் அதிகாரம் உள்ளவர்களின் ஒத்துழைப்புடன் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக இராணுவ தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச்சென்று அல்லது விடுமுறை பெறாமல் தலைமறைவாகியுள்ளவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய இராணுவ உறுப்பினர்களுக்கு உடந்தையாக செயற்படவோ, அவர்களை சமூகவிரோத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தவோ வேண்டாம் என இராணுவத் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.