SLvsWI: வெற்றி தோல்வியின்றி நிறைவு

இலங்கை - மேற்கிந்தியத்தீவுகள் இடையிலான டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி நிறைவு

by Staff Writer 19-06-2018 | 1:28 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது. Gros Islet டெரன் ஷமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 253 ஓட்டங்களைப் பெற்றதோடு, மேற்கிந்தியத்தீவுகள் 300 ஓட்டங்களை பெற்றது. 43 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், 8 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்களுடன் இலங்கை அணி நேற்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. மேலதிகமாக 8 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இலங்கை அணியின் எஞ்சிய 2 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. அதன்படி, இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 342 ஓட்டங்களுடன் முடிவுக்கு வர, மேற்கிந்தியத்தீவுகளின் வெற்றி இலக்கு 296 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஷெனன் கெப்ரியல் 62 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்தினார். வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முதல் நான்கு விக்கெட்களும் 64 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டதோடு, இலங்கை அணியின் பந்து வீச்சு ஆற்றல் மேலோங்கியது எனினும், க்ரேக் ப்ராத்வெயிட் டெஸ்ட் அரங்கில் தனது 18 ஆவது அரைச்சதத்தை எட்டி 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கிந்தியத்தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இதனால் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு கை நழுவிப் போனதோடு, போட்டி வெற்றி தோல்வியற்ற முடிவை எட்டியது. சுரங்க லக்மால் மற்றும் கசுன் ராஜித்த ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதன்படி, 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.