அக்கரைப்பற்றில் மோதல்: கைதானவர்களுக்கு பிணை

அக்கரைப்பற்றில் இரு தரப்பினருக்கிடையில் மோதல்: கைதான பிரதேச சபை உறுப்பினர்கள் பிணையில் விடுவிப்பு

by Staff Writer 19-06-2018 | 10:40 PM
Colombo (News 1st)  அக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு பிரதேச சபை உறுப்பினர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆலையடிவேம்பு - பொத்துவில் வீதியின் 40 ஆம் கட்டைப் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் நேற்று (18) நண்பகல் மோதல் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்கிடையில் காணி விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். மோதலில் காயமடைந்த 6 பேர் நேற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் நால்வர் மேலதிக சிகிச்சைகளுக்காக இன்று கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களை கைது செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இருவரும் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.