வலிகாமம் வடக்கில் 60 ஏக்கர் காணி விடுவிப்பு

வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 60 ஏக்கர் காணி விடுவிப்பு

by Bella Dalima 18-06-2018 | 7:40 PM
Colombo (News 1st) 25 வருடங்களுக்கும் மேலாக சொந்த மண்ணில் கால் தடம் பதிக்க முடியாமல் ஏங்கிய வலிகாமம் வடக்கின் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்று தமது காணிகளுக்குள் பிரவேசித்தனர். இந்த மக்களுக்கு சொந்தமான சுமார் 60 ஏக்கர் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து அவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிட்டியது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டிருந்த மக்களின் காணிகளே இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள பலாலி வடக்கு , வசாவிளான் தெற்கு , வசாவிளான், ஒட்டகப்புலவு மற்றும் மயிலிட்டிதுறை ஆகிய கிராமங்கள் இன்று விடுவிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார் இந்த கிராமங்களில் பாதுகாப்பு படையினரால் அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளும் இன்று முற்பகல் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் காவலரண்கள் என்பனவும் இன்று முற்பகல் அகற்றப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். 1990 ஆம் ஆண்டு சொந்த இடங்களிலிருந்து வெளியேறிய இந்த மக்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வசித்து வந்தனர்.